கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று தனது 47ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சச்சினின் ட்விட்டர் பதிவில், ‘எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றிகள். நான் எப்போதும் கிரீஸிலிருந்து வெளியேறி அவுட் ஆக வேண்டாமென நீங்கள் நினைத்துள்ளீர்கள். ஆனால் இன்று எனக்குள்ள ஆசை என்னவென்றால் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் 47ஆவது பிறந்தநாள் விழாவிற்கு பல்வேறு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘மாஸ்டர் பிளாஸ்டர் 47’ வாழ்த்து கூறிய பிரபலங்கள்!