கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், கரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வீரர்கள், ரசிகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
மேலும் ஐபிஎல் குறித்த அடுத்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்திக்கொள்ளலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, "கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தொடரை ரத்துசெய்தால் பிசிசிஐ-க்கு சுமார் ரூ.500 கோடி நஷ்டம் ஏற்படும்.
எனவே, இத்தொடரை வேறு நாட்டில் நடத்துவதற்கு பிசிசிஐ முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முன்வந்தால் நாங்கள் அவர்களுக்கு ஒப்புதல் அளிப்போம். இலங்கையில் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்கலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், "பிசிசிஐ ஏற்கனவே ஐபிஎல் தொடரை தென் ஆப்பிரிக்காவில் நடத்துவது குறித்து ஆலோசனை செய்துவருகிறது. அதனால் எங்கள் கோரிக்கைக்கு பிசிசிஐ பதிலளிக்கும்வரை காத்திருப்போம்.
ஒருவேளை ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்தால், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்குமிடம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம். இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் கணிசமான வருமானம் கிடைக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சில காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவிற்கும், 2014ஆம் ஆண்டுமுதல் இரண்டு வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் இந்தாண்டும் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறாத பட்சத்தில் அத்தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க:ரிக்கி பாண்டிங் - தோனி இருவரும் ஒருமித்த பண்பை கொண்டவர்கள் - மைக்கேல் ஹஸ்ஸி!