இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் உபுல் தரங்கா. இதுவரை 31 டெஸ்ட், 235 ஒருநாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தரங்கா, 9 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இதில் 18 சதங்களும், 45 அரைசதங்களும் அடங்கும்.
14 ஆண்டுளுக்கு மேலாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் தரங்கா, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இறுதிச்சுற்று வரை முன்னேற முக்கிய காரணமாக அமைந்தார். அத்தொடரில் 9 போட்டிகளில் 395 ரன்களையும் குவித்திருந்தார்.
சமீப காலமாக மோசமான ஃபார்மில் இருந்த உபுல் தரங்கா, இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வீரராக மட்டும் அணியில் இடம்பிடித்து வந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உபுல் தரங்கா அறிவித்துள்ளார். அவரது பதிவில், 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இத்தனை ஆண்டுகள் என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த ரசிகர்கள், நண்பர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: எந்த பந்தை உபயோகிப்பது என்ற ஆலோசனையில் பிசிசிஐ!