இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஷெஹான் மதுஷங்கா. இந்நிலையில், அந்நாட்டு அரசின் உத்தரவை மீறி மதுஷங்கா காரில் பயணித்ததாக காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட ஹெராயின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுஷங்காவை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஷெஹான் மதுஷங்காவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘போதைப்பொருள் விவகாரம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உடனடி நடவடிக்கையாக, அவரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்கிறது. மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முழு விசாரணை நடந்துமுடிவும் வரையில் அவர் மீதான தடை தொடரும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்காக 2018ஆம் ஆண்டு அறிமுகமான ஷெஹான் மதுஷங்கா, வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனையடுத்து அவர் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையு படிங்க:‘எங்க ஆட்டம் எப்பவும் வெறித்தனமா இருக்கும்’ - கால்பந்திலிருந்து காக்கிக்கு மாறிய இந்துமதி கதிரேசன்!