இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய அணி முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று குவஹாத்தியில் தொடங்கியது. இந்தப் போட்டி மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறும் 600வது டி20 போட்டியாகும்.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். சமீபகாலமாக டி20 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய அணியில் அருந்ததி ரெட்டி, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பதிலாக எக்தா பிஷிட், பாரதி ஃபூல்மாலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் சோபியா டங்லிக்கு மாற்றாக ஏமி ஜோன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய மகளிர் அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மந்தனா 2வது ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி மிரட்டினார். இதைத்தொடர்ந்து, 3வது ஓவரில் அவர் 12 ரன்கள் எடுத்திருந்தப் போது இங்கிலாந்து அணியின் கேத்தரின் பிரன்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.