இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரான் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கேப்டன் ஆரான் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களை சேர்த்த நிலையில், பின்ச் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர், மூன்றாவது வீரராக களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் ஜோடி சேர்ந்த கவாஜா, நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்தி தனது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார்.
106 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்களை விளாசி செட் பேட்ஸ்மேனாக இருந்த கவாஜா 33வது ஓவரில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
மறுமுனையில், நிலைத்து ஆடிய ஹண்ட்ஸ்கோம்ப் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். முன்னதாக நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்த டர்னர் இந்தப் போட்டியில் 20 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஸ்டாய்னிஸ் (20), அலெக்ஸ் கெரி (3) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.