கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதையடுத்து இத்தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வரவுள்ள 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டெயின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தாண்டு ஐபிஎல் தொடரில் நான் ஆர்சிபி அணிக்காக விளையாட தேர்வாக மாட்டேன் என்பதைத் தெரியப்படுத்தும் ஒரு செய்திதான் இது. அதனால் நான் இத்தொடரிலிருந்து விலகுகிறேன். ஏனெனில் நான் வேறொரு அணிக்காக விளையாடத் தயாராக இல்லை. எனக்கு ஆதரவு தந்த அனைத்து ஆர்சிபி ரசிகர்களுக்கும் நன்றி. அதேசமயம் நான் ஓய்வுபெறவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவந்த டேல் ஸ்டெயின், இதுவரை 95 போட்டிகளில் பங்கேற்று 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் ஐசிசி சமீபத்தில் அறிவித்த தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் அணிக்கான பட்டியலிலும் டேல் ஸ்டெயின் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘கங்குலியின் உடல்நிலை சீராகவுள்ளது’ - மருத்துவமனை அறிக்கை