இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜன.27) நடைபெற்ற நான்காவது காலிறுதிச்சுற்றில் பிஹார் அணி - ராஜஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பரத் சர்மா - லம்பா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடித்தளமிட்டது. பின்னர் இருவரும் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லமோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தி அரைசதம் கடந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லமோர் 78 ரன்களை எடுத்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பிஹார் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஷஷீம் ரத்தோர் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய எஸ்.கனி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தது மட்டுமில்லாமல், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.