தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வானவேடிக்கை காட்டிய பிரித்வி ஷா: மும்பை அணி அபார வெற்றி! - யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நான்காவது காலிறுதிச் சுற்றில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Shaw steers Mumbai into Hazare semis, crush Saurashtra by 9 wickets
Shaw steers Mumbai into Hazare semis, crush Saurashtra by 9 wickets

By

Published : Mar 9, 2021, 7:09 PM IST

Updated : Mar 9, 2021, 7:20 PM IST

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (மார்ச் 9) நடைபெற்ற நான்காவது காலிறுதிச் சுற்றில் மும்பை அணி, சௌராஷ்டிரா அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது. இதையடுத்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணியில் விஷ்வராஜ் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.

அதையடுத்து களமிறங்கிய சாம்ரத் வியாஸ் 90 ரன்களையும், சிராக் ஜானி 53 ரன்களையும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் சௌராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களைக் குவித்தது.

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தனர்.

பின்னர் 75 ரன்களை எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் உனாத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிவந்த பிரித்வி ஷா 123 பந்துகளில் 7 சிக்சர், 21 பவுண்டரிகளை விளாசி 185 ரன்களைக் குவித்ததோடு, அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன்மூலம் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றதோடு, விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறியது.

அதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேசம் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் தரவரிசை: டாப் 10இல் மூன்று இந்திய வீரங்கனைகள்

Last Updated : Mar 9, 2021, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details