பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான அஃப்ரிடி இன்று (ஜூலை 30) ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் தோனி, பாண்டிங் இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு அஃப்ரிடி, இளம் வீரர்களைக் கொண்டே அணியை மேம்படுத்தியதால் ரிக்கி பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் என பதிலளித்தார்.
உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் 332 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 178 வெற்றிகள், 120 தோல்விகளைக் கண்டுள்ளார். மேலும் ஆறு போட்டிகள் சமனிலும், 15 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன. கேப்டனாக அவரது வெற்றி விழுக்காடு 53.61 ஆக உள்ளது.
மறுமுனையில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்காக 2003, 2007 என அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பைகளை வென்று தந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 324 போட்டிகளில் செயல்பட்ட அவர், 220இல் வெற்றியும், 77 தோல்வியும் சந்தித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு ரசிகர் ஒருவர் நீங்கள் பந்துவீசியதிலேயே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு அஃப்ரிடி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் ஆகியோர் என பதிலளித்தார்.