ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுபெற்ற நிலையில், மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிந்தபோது, முதலிடத்திலிருந்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா, தற்போதைய பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். .
நேற்றைய இறுதி போட்டியில் அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் தான் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். அதேசமயம், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய இறுதி போட்டியில் 79 ரன்கள் உட்பட இந்த தொடரில் மொத்தமாக 259 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி, மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவர் தொடர் நாயகி விருதையும் வென்றார் என்பது கவனத்துக்குரியது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிபைன் ஆகியோர் முறையே இரண்டாவது, நான்காவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இதேபோல, நேற்றைய போட்டியில் 75 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருதை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலே ஏழாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.