இந்திய கிரிக்கெட் என்றால் அனைவரின் மனதிலும் முதலில் தோன்றும் பெயர் இதுவாகத்தான் இருக்க முடியும். அந்த பெயர்தான் சச்சின் டெண்டுல்கர். காரணம் கிரிக்கெட்டின் வரலாற்று புத்தகத்தில் பல சாதனைகளை படைத்தவர் பட்டியலில் இவரின் பெயர்தான் முதலில் இருக்கும்.
பிற வீரர்கள் கிரிக்கெட் போட்டியை விளையாட்டாக பார்த்தபோது சச்சின் அதை தனது வாழ்வின் ஒரு அங்கமாக பார்த்தார். அதன்மீது அவர் கொண்ட காதலின் காரணமாக அவர் தனது 24 வருட கிரிக்கெட் பயணத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறார். அதில் டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள், ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் என மொத்தமாக 100 சர்வதேச சதங்களை அடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாது அதிக 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற ஒரே கிரிக்கெட் வீரர், அதிக ஒருநாள் போட்டியில் (463) பங்கேற்ற வீரர் என்ற சாதனையையும் சச்சின் தன்னிடம் வைத்துள்ளார். இதனால் சச்சினை இந்திய கிரிக்கெட் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் போன்ற செல்ல பெயர்களைக் கொண்டு ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இத்தனை சாதனைகளையும் படைத்துள்ள சச்சின் அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் புதுவிதமான வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதுண்டு. அந்த வகையில் சச்சின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அந்த வீடியோவில், சச்சின் வலைப்பயிற்சி மேற்கொள்கிறார். அவர் அந்த பயிற்சி மேற்கொண்ட பகுதியில் பலத்த மழை காரணமாக குளம் போல் நீர் தேங்கியிருக்கிறது. எனினும் அங்கிருக்கும் சிலர் சச்சினுக்கு பந்துவீசுகின்றனர். அதை சச்சின் தனது நேர்த்தியான பேட்டிங் ஸ்டைல் மூலமாக கேஷுவலாக எதிர்கொள்கிறார்.
பின்னர் வீசப்பட்ட பவுன்சர் பந்து ஒன்று சச்சினின் தலையை நோக்கி வேகமாக வருகிறது. அதை சச்சின் விளையாடாமல் விடுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் சிரிக்கின்றனர்.
இந்த வீடியோவை பதிவிட்ட சச்சின், கிரிக்கெட் மீது நீங்கள் காதல் வைத்திருந்தால், அது நீங்கள் பயிற்சி செய்வதற்கான மாற்று வழியை காண உதவும். அதன் மூலம் நீங்கள் செய்வதை நீங்களே ரசிக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த வீடியோவின் மூலம் அவர் மழையில் முன்பு பயிற்சி செய்த ஒரு வெள்ளிக்கிழமையை நினைவுகூர்ந்திருந்தார். இதைக்கண்ட சச்சினின் ரசிகர்கள் இதை வேகமாக பகிரத் தொடங்கிவிட்டனர்.