நாடு முழுவதும் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறுத் தரப்பினர்களும் ஆசிரியர்கள் தின வாழ்த்துகளையும், அவர்களது முக்கியத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், மறைந்த தனது ஆசான் அச்ரேக்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "ஆசியர்கள் கல்வியை மட்டுமல்ல நல்ல மதிப்புகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வகையில், அச்ரேக்கர் சார் எனக்கு களத்திலும், வாழ்விலும் நேர்மையாக இருக்க (நேராக ஆட வேண்டும்) வேண்டும் என கற்றுத் தந்தார். என் வாழ்க்கையில் அவரது மகத்தான பங்களிப்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர் சொல்லித் தந்த வழியை இன்றளவும் நான் பின்பிற்றி வருகிறேன்" என நினைவு கூர்ந்தார்.
பொதுவாக, சச்சின் ஒவ்வொரு ஆசிரியர் தினத்துக்கும் மறக்காமல் தனது ஆசான் குறித்து நினைவுகூர்வார். ஆனால், இந்த ஆசிரியர் தின ட்வீட் அவருக்கு சற்று எமோஷனல் நிறைந்தவை. ஏனெனில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் அச்ரேக்கர் (87) காலமானார். அவரது இறப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சச்சின், அவரது உடலை தூக்கிச் சுமந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
கிரிக்கெட்டின் ஏ.பி.சி.டியை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். நான் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்ததற்கான அடித்தளத்தை அவர்தான் உருவாக்கினார் என சச்சின், அச்ரேக்கர் மறைந்த போது உதிர்த்த வார்த்தைகள் என்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் இடம்பெற்றிருப்பவை. இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய சச்சின் 200 டெஸ்ட், 463 ஒருநாள் போட்டிகள் என ஆடி மொத்தம் 34,357 ரன்களை குவித்துள்ளார். கிரிக்கெட்டில் பல எண்ணற்ற பங்களிப்புத் தந்த சச்சினுக்கு, ஐசிசி ’ஹால் ஆஃப் ஃபேம்’ விருது வழங்கி கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.