தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2020, 5:51 PM IST

ETV Bharat / sports

14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தெ.ஆ!

வருகிற ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

SA to tour Pakistan first time in 14 years for two Tests and three T20Is
SA to tour Pakistan first time in 14 years for two Tests and three T20Is

பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டில் எந்த ஒரு பெரிய கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை.

இதனிடையே, ஜிம்பாப்வே அணி 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இலங்கை அணி 2017ஆம் ஆண்டில் டி20 தொடரிலும் பங்கேற்றது.

இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று, பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் உள்ளதென கூறியுள்ளனர்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதன் முறையாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி ஜனவரி 16ஆம் தேதி பாகிஸ்தானிற்கு வரும் தென் ஆப்பிரிக்க அணி கராச்சி கிரிக்கெட் மைதானதில் முதல் டெஸ்ட் போட்டியை, ராவல்பிண்டி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் விளையாடுகிறது.

மேலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும்" என்றும் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தது.

அதன் பின் பாதுகாப்பு காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க - பாகிஸ்தான் அட்டவணை:

  • ஜன 26-30 - முதல் டெஸ்ட் - கராச்சி
  • பிப் 04-08 - இரண்டாவது டெஸ்ட் - ராவல்பிண்டி
  • பிப் 11 - முதல் டி20 - லாகூர்
  • பிப் 13 - இரண்டாவது டி20 - லாகூர்
  • பிப் 14 - மூன்றாவது டி20 - லாகூர்

இதையும் படிங்க:ஆறு ஆண்டுகள் இந்திய டெஸ்ட் சாம்ராஜ்யத்தை வழிநடத்திய கோலி!

ABOUT THE AUTHOR

...view details