இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, அஸ்வின், சஹா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த ரோஹித் ஷர்மா இப்போட்டியில் முதன்முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ப்ரோமோட் செய்யப்பட்டார்.
இதனால், ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக அசத்திய இவர், டெஸ்ட் போட்டியிலும் அந்த ஃபார்மை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து, மயாங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய இவர், எந்தவித பதற்றமுமின்றி தனது ஆட்டத்தைத் நிதானமாகவேத் தொடக்கினார். பந்துவீச்சாளர்களின் லூஸ் பந்துகளை மட்டுமே பவுண்டரி அடித்தார்.
பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மயாங்க் மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் மூலம் கிடைத்த நல்ல ஃபார்மை மயாங்க் அகர்வால் இப்போட்டியிலும் தக்க வைத்துகொண்டார். நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்த வந்த இந்த ஜோடியை பிரிப்பதற்கு கேஷவ் மஹராஜ், முத்துசாமி, டெம்பா பவுமா, பைட் என சுழற்பந்து வீச்சுக்கூட்டணியை கொண்டுவந்தார் டுபிளெசிஸ். ஆனால், அவரது திட்டத்தை ரோஹித் - மயாங்க் அகர்வால் இருவரும் தவிடுபொடியாக்கினர்.
இப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்பே ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், தான் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வரிசையிலும் செட் ஆவேன் என்பதை நிரூபித்திருக்கிறார் ரோஹித்.
முதல்நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 52 ரன்களும், மயாங்க் அகர்வால் 39 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர், தொடங்கிய இரண்டாம் செஷனில் மயாங்க் அகர்வால் தனது ஐந்தாவது அரைசதத்தை பூர்த்திசெய்தார். சற்று முன்வரை இந்திய அணி 44 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 78 ரன்களும், மயாங்க் அகர்வால் 56 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.