இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ராபின் உத்தப்பா. 35 வயதான இவர், கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விளையாடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், தோனியுடன் இணைந்து விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராபின் உத்தப்பா வெளியிட்டுள்ள காணொலியில், “வணக்கம் சென்னை, எப்படி இருக்கிங்க. முதலில் நான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எனது நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறியுள்ளது.
தோனியுடன் விளையாடி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. தோனி கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதற்கு முன், அவருடன் இணைந்து ஒருமுறையாவது விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
மேலும் சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோருடன் விளையாடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுரேஷ் ரெய்னாவுடன் அண்டர் -17 முதல் விளையாடி வருகிறேன். உங்களது எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன். எனக்கு விசில் போடத்தெரியாது என்றாலும், என் விளையாட்டின் மூலம் உங்களை விசில் போடவைப்பேன்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா விளையாடும் ஆறாவது அணி இதுவாகும். 2008 முதல் 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள உத்தப்பா 4,607 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவுக்காக 46 ஒருநாள், 13 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
நேற்று (பிப்.20) நடைபெற்ற விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேரளா அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா, சதமடித்து அணியை வெற்றி பெறச்செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வதேச டெஸ்டில் சதமடிக்க காத்திருக்கும் இஷாந்த்!