சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு, சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் நடைபெற்றது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதி போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியும், திலகரத்ன தில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியும் முன்னேறின.
நேற்று (மார்ச்.21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல் வீரேந்திர சேவாக் - சச்சின் டெண்டுல்கர் இணை களமிறங்கியது. அதில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சேவாக் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த பத்ரிநாத்தும் ஏழு ரன்களில் நடையைக் கட்டினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சச்சின்-யுவராஜ் சிங் இணை, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் - யூசுப் பதான் இணை, அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை, அரைசதம் கடந்து அணிக்கு உதவியது.