ஐபிஎல், ஐஎஸ்எல் பாணியில் இந்தியாவில் பேட்மிண்டன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற ஆறு அணிகளுடன் மோதும். அதில், 18 புள்ளிகள் எடுக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
அந்தவகையில், இந்தத் தொடரில் ஏற்கனவே சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் 19 புள்ளிகளுடனும் நார்தர்ன் ஈஸ்டன் வாரியர்ஸ் அணி 18 புள்ளிகளுடனும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன. இதைத்தொடர்ந்து, புனே 7 ஏசஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் அவாதே வாரியர்ஸ் அணி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்ததால் அரையிறுதிச் சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் புனே வீராங்கனை ரித்துபர்னா தாஸ் 15-13, 15-12 என்ற நேர் செட் கணக்கில் அவாதே வாரியர்ஸின் பெய்வேன் ஸாங்கை வீழ்த்தி ஒரு புள்ளி பெற்றார்.
இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் புனேவின் கியான் யூ லோ, அவாதே வாரியர்ஸின் ஷுபாங்கர் தேவை 15-12, 15-14 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்றார். இதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் புனேவின் சிராக் ஷெட்டி - ஹென்ட்ரா செதியவான் இணை, அவாதே வாரியரஸைச் சேர்ந்த கோ சூங் ஹியூன் - ஷின் பேக் ஜோடியை வீழ்த்தியது.