இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த முன்னாள் கேப்டன் தோனி, உலகக்கோப்பை தொடருக்குப்பின் அணியிலிருந்து விலகியிருந்துவருகிறார். ஒருபுறம் தோனியின் ஓய்வு குறித்து பலரும் விமர்சித்தாலும் அவரது இடத்தை அடுத்து யார் நிரப்புவார்கள் என்ற கேள்வியும் அனைவரிடத்திலும் இருந்துவருகிறது.
தோனியின் இடத்தை பூர்த்தி செய்வதற்காக இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்களில் வாய்ப்பளிக்கப்பட்டுவருகிறது. ஆனால் அவர் தோனி விட்டுச் சென்ற பெரிய இடத்தை நிரப்ப வேண்டும் என்று கட்டாயத்தில் களமிறங்குவதால் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என இரண்டிலும் சோபிக்க முடியாமல் உள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ரிஷப் பந்திற்கு பதிலாக கே.எல். ராகுல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ராகுலே விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
மேலும், தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ராகுலே விக்கெட் கீப்பராக உள்ளார். இதனால், ரிஷப் பந்த்தின் இடத்தை ராகுல் எடுத்துக்கொண்டதாகவும், இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது போன்ற கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.