இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பேசும்போது, இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
'வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவேன்'- முகமது அசாருதீன்! - ஐபிஎல் 2020
எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனை ஏற்க தயாராக உள்ளேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அசாருதீன், "இந்திய அணியின் பயிற்சியாளராக மாற எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனை ஏற்க நான் ஒருகணமும் யோசிக்கப் போவதில்லை. ஏனெனில் நான் எந்த அணியின் பயிற்சியாளராக மாறினாலும், அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் என்னால் செயல்பட இயலும். மேலும் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் எது மிகவும் மகிழ்ச்சியானதாக அமையும்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஐபிஎல் தொடர் குறித்து பேசிய அசாருதீன், "கிரிக்கெட் வீரர்களின் செயல்திறன் மற்றும் அவர்கள் விரைவாக அங்கீகாரம் பெற ஏற்ற இடமாக ஐபிஎல் தொடர் மாறியுள்ளது. சற்று யோசித்துப் பாருங்கள், ஐபிஎல் இல்லாதிருந்தால் ஒரு ஹர்திக் பாண்டியா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா போன்றவர்கள் இன்னும் முதல் தர கிரிக்கெட்டிலேயே போராடிக் கொண்டிருப்பார். ஆனால் தற்சமயம் ஏற்பட்டுள்ள சுகாதார சூழ்நிலை காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தாண்டு இறுதிக்குள் அத்தொடர் நடைபெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.