ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் மார்ச் 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்து களமிறங்கியது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அணியின் கேப்டனான ஆஸ்கர் ஆஃப்கானும் தனது பங்கிற்கு 164 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 545 ரன்களைச் சேர்த்து டிக்ளெர் செய்தது. அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 200 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் மஸ்வௌரே, ஷிகந்தர் ரஸா இணை அரை சதம் அடித்து அணிக்கு கைகொடுத்தது. இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 287 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஃபாலோ ஆன் ஆனது.