இந்தியாவின் முதல் தர உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் மும்பை அணி, ரயில்வே அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் டாஸை வென்ற ரயில்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி பிரித்வி ஷா, ரஹானே ஆகியோரது விக்கெட்டுகளை ஆரம்பத்திலே இழந்து தடுமாறியது. அந்த அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39, தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 114 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது. ரயில்வே அணி சார்பில் பிரதீப் அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி அரிந்தம் கோஷ் 72, கேப்டன் கரண் சர்மா 112 ஆகியோரது ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 266 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. மும்பை பந்துவீச்சில் தேஷ்பண்டே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.