2019-20 ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் ஏ, பி பிரிவுக்கான இரண்டாம் சுற்றுப்போட்டியில் தமிழ்நாடு அணி, இமாச்சலப் பிரதேச அணியை எதிர்கொண்டது. திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்து வீசியது.
தமிழ்நாடு அணியின் சுழல் நட்சத்திரம் அஸ்வினின் சுழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இமாச்சல் அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆகாஷ் வசிஷ்ட் 35, மயாங்க் டகர் 33 ரன்கள் எடுத்தனர். தமிழ்நாடு பந்துவீச்சில் அதிகபட்சமாக அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் அஸ்வின் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பியதால் முதல் இன்னிங்சில் 96 ரன்களுக்கு தமிழ்நாடு அணி ஆட்டமிழந்தது. அபாரமாகப் பந்துவீசிய இமாச்சல் வீரர்கள் வைபவ் அரோரா 3, ஆகாஷ் வசிஷ்ட், ரிஷி தவான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து 62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இமாச்சல் அணி மீண்டும் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சிலும் அஸ்வின் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.