2019ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் நான்காவது சுற்றுக்கானப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் கர்நாடக அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா 29 ரன்னிலும், ரஹானே 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 77 ரன்கள் எடுத்தார். கர்நாடக அணி சார்பாக கவுசிக் 3, மிதும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய கர்நாடக அணி 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சம்ர்த் 86 ரன்களும், ஷரத் 46 ரன்களும் எடுத்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய மும்பை அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 149 ரன்களுக்கு சுருண்டது. இதில் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்து போராடினார்.