கோவிட்-19 பெருந்தொற்றால் இதுவரை இந்தியாவில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த 18ஆம் தேதி தனது 28ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய கே.எல்.ராகுல், கரோனாவால் பாதிக்கப்பட்டு உணவிற்கு அவதியுறும் பொதுமக்களுக்கு உதவ, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் தான் பயன்படுத்திய தனது பேட், ஜெர்சி, கிளவுஸ் போன்ற உடமைகளை ஏலத்தில் விற்பனை செய்து, அதில் வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
தற்போது அவர் அறிவித்தது போலவே அவர் உலகக்கோப்பைத் தொடரில் பயன்படுத்திய அனைத்து உடைமைகளையும் ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். அதன்படி அவரது பேட் 2 லட்சத்து 64 ஆயிரத்து 228 ரூபாய்க்கும், ஹெல்மட் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 677 ரூபாய்க்கும், பேட்கள் (Pads) 33 ஆயிரத்து 28 ரூபாய்க்கும், ஒருநாள் ஜெர்சி ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், டி20 ஜெர்சி ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 824 ரூபாய்கும், டெஸ்ட் ஜெர்சி 1 லட்சத்து 32 ஆயிரத்து 774 ரூபாய்க்கும், கிளவுஸ் 28 ஆயிரத்து 782 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன.
இதனையடுத்து கே.எல். ராகுல், ஏலம் மூலமாக கிடைத்த மொத்த பணத்தையும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அஸ்வினை முழுவதுமாக நம்பினார் தோனி: சுரேஷ் ரெய்னா!