சச்சினுக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக தோனி வலம்வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.
ஆனால் இரண்டு மாதங்கள் அணியில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்ற அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்காமல், இந்திய ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியில் இடம்பெறாத இவர், வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் மீண்டும் தனது ஓய்வு காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
தோனியின் ஓய்வுக்குறித்து பல்வேறு வீரர்களும் கருத்துத் தெரிவித்துவரும் நிலையில், அவர் பில்லியர்ட்ஸ் விளையாடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் அவர், தனது சொந்த ஊர் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் (ஜெ.எஸ்.சி.ஏ) பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
ராஞ்சியில் மழை பெய்ததால், அவர் ஜெ.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் பில்லியர்ட்ஸ் விளையாடி தனது நேரத்தை கழித்தார். அவருடன் நானும் மைாதனத்தின் பொறுப்பாளரும் புகைப்படம் எடுத்துகொண்டது மகழிச்சியளிக்கிறது என ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏ குனால் சரங்கி தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.