இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது.
இதனால் அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சிம்மன்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா, மலிங்கா, லக்ஷன் சண்டாக்கன், உதானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் ஓவரில் 12 ரன்கள் விளாசினாலும், இரண்டாவது ஓவரில் அவிஷ்கா பெர்னான்டோ (7), ஷேகன் ஜெயசூர்யா (0), குசல் மெண்டிஸ் (0)ஆகியோரின் விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 10 ரன்களிலும், டசுன் ஷனாக்கா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணி 56 ரன்களுக்குள் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த குசல் பெரரேரா - வானின்டு ஹசரங்கா ஆகியோர் அதிரடியாக ஆடினர். இந்த இணை ஆறாவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் குவித்தபோது ஹசரங்கா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் பெரேராவும் 66 ரன்களில் வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்..
இதனால், இலங்கை அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓசானே தாமஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.