டி20 கிரிக்கெட்டின் வருகையாலும், பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக ஐசிசி வரையறுக்கும் விதிமுறையினாலும் தற்போது ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதாக மாறிவிட்டது. ஆனால், இந்த நிலை 1990களிலும், 2000ஆம் ஆண்டுகளிலும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அத்தகைய வாய்ப்பு சையத் அன்வர், ஜெயசூர்யா, சார்லஸ் காவின்ட்ரி, ஏன் சச்சின் உட்பட வெகு சிலரது கைக்குச் சென்று நழுவியது.
அதில், அன்வர் 1999இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் அடித்ததே ஒருநாள் போட்டிகளில் நீண்ட ஆண்டுகளாக தனி ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதன்பின் 2010 பிப்ரவரி 24இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் இந்த சாதனையை முறியடிப்பார் என யாரும் முதலில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சச்சின் சதம் விளாசினார்.
அப்போட்டியில் சச்சினின் பேட்டிங்கை பார்த்தால், 1998இல் அவரது விண்டேஜ் ஆட்டம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அதிரடியாக விளையாடினார் சச்சின். இதனால், சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழத்தொடங்கியது. வழக்கம் போல கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை தோளில் சுமந்து விளையாடிய அவர், சையத் அன்வரின் 194 ரன் சாதனையை முதலில் முறியடித்தார்.