T20WorldCup: ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்கனவே அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகள் தேர்வாகியுள்ளன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நான்காவது பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி, ஹாங்காங் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற ஓமன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய ஓமன் அணியின் தொடக்க வீரர் ஜடிந்தர் சிங் ஒருமுனையில் அதிரடியில் கலக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. சிறப்பாக விளையாடிய ஜடிந்தர் 50 பந்துகளில் 67 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால், ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளுக்கு 134 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாங்காங், எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியாது. இதனால் 18 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து ஹாங்காங் தடுமாறியது.
அதன்பின் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஸ்காட் சிறிது நிலைத்து ஆடி 44 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஓமன் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பை தொடருக்கு இறுதி அணியாக தகுதி பெற்றது. ஓமன் அணியின் வெற்றிக்கு உதவிய ஜடிந்தர் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை டி20 தொடருக்கு ரெடியான அடுத்த அணி