இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் நாளில் இந்திய தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா - மயாங்க் அகர்வால் ஜோடி 59.1 ஓவர்களில் 202 ரன்களை எடுத்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும் மயாங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை முதலே இருவரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த இணை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்கள் படைத்த சாதனையையும் தகர்த்தது. மயாங்க் அகர்வால் 202 பந்தில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதையடுத்து இரண்டு வீரர்களும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். ரோஹித் சர்மா மின்னல் வேகத்தில் ரன் வேட்டையைத் தொடர்ந்ததால் அவர் 150 ரன்களைக் கடந்தார். இதனால் இந்த இணை 300-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததால் முந்தைய இந்திய ஓப்பனர்களின் சாதனையை முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த இணையை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பவுலர்கள் விழிபிதுங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கேசவ் மஹாராஜ் வீசிய 82ஆவது ஓவரின் நான்காவது பந்தில் சிக்சரும், ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் அடித்த ரோஹித் அந்த ஓவரின் கடைசிப் பந்தை அடிப்பதற்காக கோட்டை விட்டு வெளியேறியதால் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்க நேரிட்டது. ரோஹித் சர்மா 371 பந்துகளில் 215 ரன்கள் (23 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) அடித்தார்.