உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி முடிவின் தாக்கம் இன்றளவும் குறையாமல் சமூகவலைதளத்தையும், செய்தி ஊடகங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து என இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆடியதால் அந்தப் போட்டி இரண்டு முறை டிராவில் முடிவடைந்தது.
எனினும் ஐசிசி விதிமுறைப்படி பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இதற்கு எதிராக பல கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ஐசிசி இதுபோன்ற விதியை மாற்ற வேண்டும் என குரல் கொடுத்தனர்.
உலகக்கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணி அந்த இறுதிப்போட்டி முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையிலும் போட்டி முடிவு குறித்த விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், நேற்று நியூசிலாந்து - தென்னாப்பிரிக்க அணிக்கு இடையேயான ரக்பி போட்டி 16 - 16 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்த நிகழ்வை குறிப்பிட்டு நியூசிலாந்து ரக்பி அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஐசிசியை சாடும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அதில், 'இந்த போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்படவில்லை. இந்த போட்டி டிராவிலேயே முடிவடைந்தது. இதற்கு போட்டிக்கு நன்றி' என பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு பவுண்டரிகளின் அடிப்படையில் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு அளித்த ஐசிசியின் விதியை சாடும்படியாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.