ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 13ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவிலுள்ள நியூசிலாந்து-வங்கதேச அணிகள் மோதின. மெல்போர்னில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.2 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் ரேச்சல் ப்ரிஸ்ட் (25), சுஸி பேட்ஸ் (15), கேப்டன் சோபி டிபைன் (11), மேடி க்ரீன் (11) ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கேதச அணி தரப்பில் ரித்து மோனி நான்கு விக்கெட்டுகளையு0ம், சல்மா கத்துன் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 92 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேச அணியை சேஸ் செய்ய விடாத அளவிற்கு நியூசிலாந்து வீராங்கனைகள் அபாரமாகப் பந்துவீசினர்.
நியூசிலாந்து அணியிலாவது நான்கு பேர் இரட்டை இலக்கு ரன்கள் எடுத்தனர். ஆனால், வங்கதேச அணியிலேயோ நிகர் சுல்தானா (21), முர்ஷிதா கான் (11), ரித்து மோனி (10) ஆகிய மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்கள் எடுத்தனர். மற்ற எட்டு வீராங்கனைகளில் இருவர் ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட்டும், மற்ற ஐந்து பேர் ஒற்றை இலக்கு ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில், வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு சுருண்டது.