நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 18) ஆக்லாந்தில் நடைபெற்றது.
இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக சதாப் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான்:
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சஃபீக், ஹைத்ர் அலி, முகமது ஹபீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய சதாப் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சதாப் கான் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சொதப்பிய பாகிஸ்தான்:
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சதாப் கான் 42 ரன்களையும், ஃபஹீம் 31 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் ஜேக்கப் டஃப்பி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.