நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டிச. 03ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சன், தொடக்க வீரர் டாம் லேதம் ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 519 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 251 ரன்களையும், டாம் லேதம் 86 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச், கேப்ரியல் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேரதிர்ச்சியாக பிராத்வெயிட், கேம்பல், புரூக்ஸ், பிராவோ, சேஸ், ஹோல்டர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.