கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அது சச்சின்தான். 200 டெஸ்ட், 463 ஒருநாள் போட்டிகள் என 22 யார்ட்ஸுக்குள் 24 வருடங்கள் பயணித்த அவர், 100 சதங்கள் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்து, கிரிக்கெட்டின் கடவுளாக திகழ்கிறார். இதனால், சச்சினின் பெரும்பாலான சாதனைகளை முறியடிப்பது கடினம் என அவரது ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், தற்போதைய நவீன கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சச்சினின் பல சாதனைகளை முறியடித்துவருகிறார். குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாக 10,000, 11,000 ரன்களை குவித்த சச்சினின் சாதனையை அவர் முறியிடித்துள்ளார்.
11 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் கோலி 388 சர்வதேச போட்டிகளில் விளையாடி இதுவரை 68 சதங்களை விளாசியுள்ளார். அதில் ஒருநாள் போட்டிகளில் 43 சதம் அடங்கும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (49) அடுத்தப்படியாக கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், கோலியை கெளரவிக்கும் வகையில் ஃபெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. தற்போது கோலியின் இந்த வளர்ச்சிக் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில்,
"சச்சின் படைத்த சாதனைகளிடம் மற்ற வீரர்கள் யாரும் நெருங்கக்கூட மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தால் கிரிக்கெட்டை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், இருவரையும் ஒப்பிடுவது தவறு. அவர் இன்னும் அதிகமான சாதனைகள் படைக்க வேண்டும். அவரது கிரிக்கெட் பயணத்தின் நடுவிலேயே அவரைப் பற்றி இப்போது பேசவது தவறு" என்றார்.