தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2019, 11:13 PM IST

ETV Bharat / sports

இன்னும் 50 நாள் இருக்கே, அதுக்குள்ள எதுக்கு? கோலி பிறந்தநாள் அலப்பறைஸ்...#AdvanceHBDKingKohli

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் பிறந்தநாள் வருவதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், #AdvanceHBDKingKohli ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

Virat Kohli

கிரிக்கெட்டின் சேஸ் மாஸ்டர், ரன் மெஷின் என்று அழைக்கப்படுவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 2008இல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்றவர். இதனால், 2008ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின், 2012 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 321 ரன்களை 40 ஓவர்களுக்குள் இந்திய அணி எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

133 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்த மகிழ்ச்சியில் கோலி

இப்போட்டியில், தனது சிறப்பான பேட்டிங்மூலம் 86 பந்துகளில் 133 ரன்களை விளாசி இந்திய அணி 36.4 ஓவர்களிலேயே 321 ரன்களை சேஸ் செய்ய வைத்தார். இதனால், கிரிக்கெட்டின் சேஸ் மாஸ்டர் என அழைக்கப்பட்டார். அதன்பின் ஏற்ற, இறக்கங்களை மாறிமாறி விராட் கோலி சந்தித்துவந்தார். ஆனால், 2016க்கு பிறகு கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இன்றளவும் அறியப்படுகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் 50க்கும் அதிகமாக ஆவரேஜ் வைத்திருக்கும் முதல் வீரர் இவர்தான்.

விராட்

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை குவித்த முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். 2014இல் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பின் 2017இல் தோனி ஒருநாள், டி20 போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து தானாக விலகினார். இதனால், கோலி மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டன் ஆனார்.

இந்திய வீரர்களுடன் கோலி

இவரது தலைமையின்கீழ் இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதிப் போட்டி வரையும், நடப்பு ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டி வரையும் சென்றது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவரது தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை வென்றதுதான் இவரது கேப்டன்ஷிப்பை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது.

டிரெண்டிங் ஆன #AdvanceHBDKingKohli

இந்நிலையில், இவரது பிறந்தநாள் வரும் நவம்பர் 5ஆம் தேதி கொண்டாட இன்னும் 50 நாட்கள் உள்ளன. இதைமுன்னிட்டு #AdvanceHBDKingKohli ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்தனர். 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இதுவரை 386 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 68 சதம், 97 அரைசதம் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கிங் கோலி'யின் ப்ளாஷ்பேக்..!

ABOUT THE AUTHOR

...view details