2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர்வரை இந்திய கிரிக்கெட் அணியின் வருடாந்திர வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. ஏ+, ஏ, பி, சி என நான்கு கிரேடுகளில் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 27 வீரர்கள் இடம்பெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் பெயர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
இதனால், அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்ததாக பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், 38 வயதான இவர் இன்று ஜார்கண்ட் அணியுடன் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் புதிய பவுலிங் மெஷினை கொண்டுவந்து வலை பயிற்சியில் ஈடுபட்டார். மற்ற வீரர்களெல்லாம் சிவப்பு நிற பந்துகளில் பேட்டிங் பயிற்சி செய்ய இவர் வெள்ளை நிற பந்துகளில் பயிற்சி மேற்கொண்டார்.
தோனியின் வருகை குறித்து ஜார்கண்ட் அணியின் நிர்வாகக் குழு கூறுகையில் "தோனி எங்களுடன் பயிற்சி மேற்கொள்வார் என்பது எங்களுக்கே தெரியாது. அவரது திடீர் வருகை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் பேட்டிங் செய்த பின் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டார். இன்று முதல் தோனி வழக்கமாக ஜார்கண்ட் அணியிடன் பயிற்சி பெறுவார் என எதிர்பார்க்கிறோம். அவரது இருப்பு நிச்சயம் ஜார்கண்ட் வீரர்களுக்கு உதவும்" என்றார்.