இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று (செப்.1) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், ஃபக்கர் சமான், கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் ஹைதர் அலி, அனுபவ வீரர் முகமது ஹபீஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த ஹைதர் அலி, தனது அறிமுக டி20 போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து முகமது ஹபீஸும் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 86 ரன்களையும், ஹைதர் அலி 54 ரன்களை எடுத்தனர்.