பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு தடை விதித்தது ஐசிசி. இவர்களில் முகமது அமிர் 5 ஆண்டு தண்டனை காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு மீண்டும் அணிக்குத் திரும்பினார். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த முகமது அமீர், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு:
இதையடுத்து, காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த முகமது அமீர், தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியிலும் சேர்க்கப்படாமல் இருந்தார். அதன்பின் இலங்கையின் டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடி வந்தார்.