அகமதாபாத்தின் சபர்மதி என்ற பகுதியில் 1982ஆம் ஆண்டில் பிரபல கட்டடக் கலைஞர் சஷி பிரபு என்பவர் உருவாக்கிய வடிவத்தால், மொடீராவில் சர்தார் வல்லபாய் மைதானம் ஒன்பது மாதங்களில் கட்டப்பட்டது. அப்போது இந்த மைதானத்தின் இருக்கையளவு 49 ஆயிரம் மட்டுமே.
2017ஆம் ஆண்டில் ரூ. 800 கோடி செலவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்க்கக்கூடிய வகையில் தொடங்கிய இந்த மைதானத்தின் புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதன்மூலம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் இந்த மைதானத்தை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று திறந்துவைத்தார்.
தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்த மைதானத்தில், நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் குறித்து பார்ப்போம்.
முதல் டெஸ்ட் போட்டி
1983 நவம்பர் 12இல் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. மொடீரா மைதானத்தில் அரங்கேறிய முதல் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மொடீரா மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், இந்தியா நான்கு வெற்றிகள், இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஏனைய ஆறு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
முதல் ஒருநாள் போட்டி
இந்த மைதானத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1984, அக்டோபர் 5இல் நடைபெற்றது. அதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியதில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதேபோல இந்த மைதானத்தில் இதுவரை 24 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இந்திய அணி 16 போட்டிகளில் பங்கேற்று ஏழு வெற்றி, எட்டு தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.
டெஸ்டில் 10,000 ரன்களை முதலில் குவித்த லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர்
1987இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் 63 ரன்கள் அடித்ததன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை மொடீரா மைதானத்தில் படைத்தார்.
கபில்தேவின் சாதனைக்காக மொடீராவில் பறக்கவிடப்பட்ட 432 பலூன்கள்
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை (431 விக்கெட்டுகள்) இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் 1994இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்மூலம் முறியடித்தார். மொடீரா மைதானத்தில் அரங்கேறிய இந்தச் சாதனையை கெளரவிக்கும்விதமாக அப்போது மைதானத்தில் 432 பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்று ஒரு நிமிடத்திற்கு (Standing Ovation) கைகளைத் தட்டிப் பாராட்டினர்.
கிரிக்கெட் கடவுளின் முதல் இரட்டை சதம்
பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இதே நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்திருந்தார். அதே மாஸ்டர் பிளாஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை மொடீராவில் 1999ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் எட்டினார்.
உலகக்கோப்பையில் ரன் மெஷினாக மாறிய லிட்டில் மாஸ்டர் சச்சின்
2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் 53 ரன்களை அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் 18,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சச்சின் டெண்டுல்கர்.
சரித்திரத்தில் என்றும் மறக்க முடியாத போட்டி
மொடீரா மைதானம் என்று சொன்னவுடன் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது 2011 உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதிப் போட்டியில் அப்போதைய நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்த தருணம்தான்.
2011 உலகக்கோப்பை போட்டியில் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா இந்த மைதானத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்திருந்தாலும், இந்திய அணியின் இந்த வெற்றி சரித்திரத்தில் மறக்க முடியாத வெற்றியாகும். யுவராஜ் சிங்கின் வின்னிங் செலபிரேஷன் இன்றளவும் மறக்க முடியாது. இந்திய அணியின் இந்த வெற்றிதான் பின் நாள்களில் மொடீரா மைதானத்தின் அடையாளமாகவும் மாறியது.
இதையும் படிங்க:உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவின் சிறப்புகள்!