டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே, பெரும்பான்மையான வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள். இதில், ஒரு சில பேட்ஸ்மேன்கள் டிஃபென்ஸில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அதிகமான பந்துகளை எடுத்துகொண்டுதான் ரன்களையும் எடுப்பார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்திய வீரர் ராகுல் டிராவிட்தான். இவரது தடுப்பாட்டத்திற்காகவே டிராவிட்டுக்கு கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்ற பெயர் உண்டு. அதேசமயம், அவர் முதல் ரன் எடுப்பதில் மட்டும் அதிக பந்துகளை எடுத்துக்கொள்ள மாட்டார்.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் மிகுவேல் கம்மின்ஸ் முதல் ரன் எடுப்பதற்கு டிராவிட்டைவிடவும் அதிக பந்துகளை எடுத்துகொள்கிறார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் மிகுவேல் கம்மின்ஸ் 10ஆவது வீரராக களமிறங்கினார். இவருடன் 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தப் பார்டனர்ஷிப்பில் கம்மின்ஸ் ஒரு ரன்னும் அடிக்காமல் தொடர்ந்து டிஃபென்ஸ் செய்வதில் குறிகோளாக இருந்தார்.
இறுதியில், அவர் ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனதால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், 45 பந்துகளை எதிர்கொண்டு பேட்டை சுழற்றியபோது காற்றுதான் வந்ததே தவிர, அவரிடமிருந்து ஒரு ரன்னும் வராததுதான் பரிதாபத்திலும் பரிதாபம். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதனால், இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கெய்த் அர்தர்டனின் இச்சாதனை (42 பந்துகள்) முறியடிக்கப்பட்டது. இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மிகுவேல் கம்மின்ஸ் ஆறுமுறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.