இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடரை இழந்த நிலையில், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடிவருகிறது.
இந்தூரில் 14ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுல் ஹாக் 37 ரன்கள் குவித்தனர்.
மயங்க் அகர்வால் மற்றும் அஜிங்கியா ரஹானே இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வால், ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்களை கடந்தார். பின் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த அகர்வால் சிறப்பாக விளையாடி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் மயங்க் அகர்வால் அதன் பின் 243 ரன்கள் எடுத்திருந்த அகர்வால், மெஹிதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து விளையாடி வந்த ரவிந்திர ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய உமேஷ் யாதவ் தனது பங்கிற்கு மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார்.
இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 493 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி சார்பில் அபு ஜயெத் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: அபுதாபி டி10 கிரிக்கெட் தொடர்: தொடக்க விழாவில் கலந்துகொண்ட மம்மூட்டி