இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் கடந்த 18ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தப் பதவிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பரோடாவைச் சேர்ந்த நயன் மோங்கியா, ஹரியானாவின் சேட்டன் சர்மா, மத்தியப் பிரதேசத்தின் ராஜேஷ் ஷவான், மும்பையின் அஜித் அகர்கர் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனையடுத்து இந்தக் குழுவை நேர்காணல் செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா, சி.ஏ.சி. உறுப்பினர்களைத் தேர்வுசெய்தார்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால், சுலக்ஷனா நாயக் ஆகியோர் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இக்குழுவில் இடம்பெறும் மூன்றாம் நபர் பற்றிய தகவல் எதையும் வெளியிடப்படவில்லை.