இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (டிச.17) முதல் நடக்கவுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து கொண்டார்.
மேலும் இப்பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய அணியின் புஜாரா 766 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே 726 புள்ளிகளைப் பெற்று பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் 845 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் நெய்ல் வாக்னர் 840 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.