ரசிகர்களுக்கு பிடித்த கமெண்டெட்டராக இருந்த ரவி சாஸ்திரி, தற்போது அதிகம் வெறுக்கும் நபராக மாறியுள்ளார். கமெண்ட்ரியைவிட்டு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளரான டன்கன் ஃபிளட்சர் பொறுப்பு வகித்தபோது, 2014ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்மூலம், கமெண்ட்ரியில் இருந்த ரவி சாஸ்திரி அணியின் டைரக்கடர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார்.
இவரது வழிகாட்டின்கீழ் இந்திய அணி 2015 உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை இவ்விரண்டிலும் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுவரைதான் சென்றது. இதன் பின்னர், 2016 முதல் 2017 ஜூன் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவிற்கும் கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.
இதனால், அவருக்கு பதிலாக ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2017ல் பதவி ஏற்றார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்று இருந்தாலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது. அதற்கு ரவி சாஸ்திரிதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு ஊருக்கு பெட்டியை கிளப்பியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு கோலி - ரவி சாஸ்திரி இருவரும் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ததுதான் என்ற பிரச்னை வெடித்தது.
பெரும்பாலும் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமே கோலி - ரவி சாஸ்திரி இருவரும் அணியில் தேவையில்லாமல் செய்யும் மாற்றங்கள்தான். கமெண்ட்ரியில் ரவி சாஸ்திரி தனது குரலில் காட்டிய கம்பீரம், பயிற்சியாளரில் மவுனமாகியது நிதர்சனம்.
கோலியிடம் இருந்து வேலை வாங்குவதற்கு பதிலாக அவருக்கு ஏற்றவாறு ரவி சாஸ்திரி உள்ளார். நான்காவது வரிசை என்ற ஒரு பிரச்னையுடன் உலகக்கோப்பைக்கு சென்ற இந்திய அணியில் தற்போது நான்காவது வரிசை, மிடில் ஆர்டர், ஓப்பனிங் பேட்ஸ்மேன், ஆறாவது பந்துவீச்சாளர் யார் போன்ற பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாலு நாலு என்று சொல்லி சொல்லியே கோப்பையை கோட்டை விட்டுடிங்களே கோபால்... என ரசிகர்கள் நொந்துகொள்கின்றனர்.
இதனால், ரசிகர்கள் சிவாஜி படத்தில் வரும் வசனம் போல, பேசமாக நீங்க கமெண்ட்ரிக்கே போயிடங்க ரவி சாஸ்திரி (சிவாஜி) என தொடர்ந்து எதிர்ப்பலைகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரது பதவிக் காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.