மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமநிலையையும் வகித்துவருகிறது.
மேலும் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரஹானே, அணியைச் சிறப்பாக வழிநடத்திச் சென்றதாக இந்தியாவின் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரஹானேவின் கேப்டன்சியை ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் பாராட்டுவது மிகுந்த பெருமைக்குரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின்போது வர்ணனையாளர்களாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மைக் ஹஸ்ஸி, ஷேன் வார்ன் ஆகியோர் ரஹானேவின் கேப்டன்ஷிப்பை பாராட்டி பேசியுள்ளது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் ரஹானேவின் கேப்டன்சியை பாராட்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறு சிறந்த தருணங்களும் இப்போட்டியில் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மெல்போர்னில் மாஸ் காட்டிய அஸ்வின் - முரளி சாதனை முறியடிப்பு