ஓமன், அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் டி20 தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.
முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் டௌட், பென் கூப்பர் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய பென் கூப்பர் 65 ரன்களையும், மேக்ஸ் டௌட் 38 ரன்களையும் அடித்தனர். நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது.
சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி பவுல் ஸ்டெர்லிங், கெவின் ஓ பிரைன் ஆகியோரின் சிறப்பான தொடக்க ஆட்டத்தின் மூலம் எதிரணியை திணரடித்தது.
கெவின் ஓ பிரைன் 23 ரன்களிலும், பவுல் ஸ்டெர்லிங் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேரி டெக்டர் அதிரடியாக விளையாடி 47 ரன்களை சேர்த்தார்.
இதனால் அயர்லாந்து அணி 18.2 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்து, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி ஓமன் டி20 தொடரின் புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.