இந்தியாவில் டி20 திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் 13ஆவது சீசனில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், 190 இந்திய வீரர்கள், 145 வெளிநாட்டு வீரர்கள், உருப்பு நாடுகளைச் சேர்ந்த மூன்று வீரர்கள் என மொத்தம் 338 வீரர்கள் இந்த விலைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கம்மின்ஸ் முதிலிடத்தில் உள்ளார். அடிப்படை தொகையாக ரூ. 2 கோடியிலிருந்து அவரை ரூ. 15.5 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. அவருக்கு அடுப்படியாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் இரண்டாவது இடம்பிடித்தார். அவரது அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியிலிருந்து பஞ்சாப் அணி ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது.
இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் ரூ. 50 லட்சத்திலிருந்து 17 மடங்கு அவரது தொகை அதிகரித்து ரூ. 8.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. இப்படி ஒவ்வொரு வீரரும் ஏலத்தில் விலைபோன நேரத்தில் அமைதியாக இருந்த சிஎஸ்கே அணி இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை அடிப்படைத் தொகை 1 கோடி ரூபாயிலிருந்து 5.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
வெளிநாட்டு வீரர்கள் மட்டுமில்லாமல் இந்த ஏலத்தில் அடிப்படைத் தொகை ரூ. 20 லட்சத்திலிருந்த இந்திய இளம் வீரர்களான யஷஸ்வி ஜெஸ்வால் ரூ. 2.40 கோடிக்கும், கார்த்திக் தியாகி ரூ. 1.30 கோடிக்கும் ராஜஸ்தான் அணிக்கு ஒப்பந்தமாகினர்.
இதனிடையே, இந்த ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் டேலே ஸ்டெயின் (பெங்களூரு ரூ. 2 கோடி), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (டெல்லி ரூ. 4 கோடி), டாம் கரண் (ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 1கோடி), ஆண்ட்ரூவ் டை (ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 1 கோடி) ஆகிய நான்கு வீரர்கள் கடைசி ஏலத்தில் தேர்வாகினர். மேலும், கடைசி சுற்றில் 21 வீரர்கள் ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 55 லட்சம் வரை ஒப்பந்தமாகினர்.