2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக எட்டு அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்துள்ளன. தொடர்ந்து, அந்த நாட்டு விதிகளின்படி அனைத்து அணிகளும் ஆறு நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஆறு நாள்கள் முடிவடைந்து நேற்று (ஆக. 28) தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆர்சிபி அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் கரோனா தொற்று உறுதியாகாத நிலையில், அனைவரும் இன்று தங்களது பயிற்சியைத் தொடங்கினர்.
இதுகுறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ''பயிற்சி மேற்கொண்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் வலைப்பயிற்சி மேற்கொண்டபோது ஆறு நாள்கள் மட்டுமே விலகியிருந்தது போல் உணர்ந்தேன். ஆர்சிபி அணி வீரர்களுடன் செலவிட்ட நேரம் சிறப்பானதாக அமைந்தது'' எனப் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இதுவரை வெளியாகாத நிலையில், இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை அணியைச் சேர்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அட்டவணை வெளியாவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொண்டாட்டத்தில் கோலி, அனுஷ்கா தம்பதி: வைரலாகும் வீடியோ