2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக எட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தனர்.
இவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஆக. 28) பல்வேறு வீரர்களும் பயிற்சிக்கு திரும்பினர். இதனிடையே சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவர், நிர்வாகிகள் 11 பேர் என 13 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை மொத்தம் 1,988 ஆர்.டி-பி.சி.ஆர் கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இரண்டு வீரர்கள் உள்பட, 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களை மீண்டும் தனிமைப்படுத்தி, ஐபிஎல் மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா உறுதிசெய்யப்பட்ட வீரர்கள், தொற்றிலிருந்து குணமடைந்ததும் மீண்டும் தங்களது அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னை அணியால் தாமதமாகும் ஐபிஎல் அட்டவணை!